துபாயில் கார் ஓட்டுபவர்களுக்கு மட்டும் இந்தக் ‘கருப்பு’ என்றாலே அலர்ஜி. ஏன் தெரியுமா? ஏதேனும் சாலைவிதிகளில் மீறி நடந்தால் அவர்கள் ஓட்டுனர் உரிமத்தில் கரும்புள்ளி பதியப்படும். புள்ளியின் எண்ணிக்கை குற்றத்திற்கேற்றவாறு இருக்கும். அபராதத்தொகையும் இருக்கும். ஆனால் ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக இருபத்தி நான்கு கரும்புள்ளிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
அதை ஒருவர் மீறிவிட்டால் அவரது ஓட்டுனர் உரிமம் அந்த ஆண்டு முழுவதும் முடக்கப்படும். கார் ஓட்ட முடியாது. (லைசன்ஸ் இல்லாதவர் சும்மா ட்ரைவர் சீட்டில் கூட உட்காரக்கூடாது என்பது விதி)

மேடு இருந்தால் பள்ளம் இருக்கும். வெளிச்சம் இருந்தால் இருட்டும் இருக்கும் இல்லையா? அதே போல கருப்பு இருந்தால் வெள்ளையும் இருக்கணும்தானே…
2012 ஆம் ஆண்டுவரையிலும் வெறும் கரும்புள்ளி/அபராதம் என்றிருந்த நிலையில் அதற்குப் பிறகு வெண்புள்ளிகள் / பரிசு என்று யோசித்தது துபை போலீஸ்.

13920799_10154370262421575_3550201202036360770_n

ஆம், ஒவ்வொரு மாதமும் ஒரு ஓட்டுனருக்கு அவரது கணக்கில் ஒரு வெண்புள்ளி கிடைக்கும். ஏதும் சிறுவிபத்துக்குக் காரணமானாலோ / விதிமீறல்கள் இருந்தாலோ வெண்புள்ளி கரும்புள்ளியாக மாறிவிடும்.அபராதமும் ஒட்டிக்கொள்ளும்.
அப்படி ஏதும் இல்லாமல் ஒழுங்காக வண்டி ஓட்டியிருந்தால் காவல்துறை இன்னொரு வெண்புள்ளி பரிசாகக் கொடுக்கும். இதுபோல ஒரு ஆண்டு முழுவதும் விபத்தேதும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக வண்டி ஓட்டி, சாலைவிதிகளை மதித்து ஆண்டின் இறுதியில் இருபத்திநான்கு வெண்புள்ளிகள் சேர்த்திருந்தால், காவல்துறை அவர்களை கௌரவிக்கிறது.
இதில் புள்ளிவிபரங்களின் படி அதிகமான விபத்துகளில் பாதிக்கப்படுவோர் அல்லது விதிமீறல்களில் ஈடுபடுவோர் என்று வருவதில் அதிகமானோர் இளரத்தங்கள். ஆம் 18 முதல் 21 வயதுக்குட்பட்டோர். ஆகவே அவர்களை கவரும் வண்ணம் புதிய கார் பரிசு என்று அறிவித்தது துபை காவல்துறை.
ஒவ்வொரு ஆண்டும் இந்த வெண்புள்ளிகள் முழுவதுமாகப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறது காவல்துறை. அதாவது குற்றங்கள் குறைகிறது என்றுதானே பொருள். சென்ற ஆண்டு 1500 பேர் என்ற நிலை இந்த ஆண்டு 1800 என்று அதிகரித்துள்ளது.
அமீரகத்தைச் சார்ந்த இரு இளம்பெண்கள் (18-21 வயது) புத்தம்புதிய ஹுண்டாய் Veloster மற்றும் Sonata கார்களைப் பரிசாகப் பெற்றுள்ளனர்.
ஓருவர் தனக்குப் பரிசாகக் கிடைத்த காரை தொண்டுநிறுவனம் ஒன்றிற்கு அன்பளிப்பு செய்துவிட்டார்.
இந்த ஆண்டு தேர்வான 1800 பேரில் 1090 பேர் ஆண்கள். 710 பேர் பெண்கள். எந்தெந்த நாட்டினர் என்ற வரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தோர், அமீரகத்தைச் சார்ந்தோர் 400 பேர். இந்தியர்கள் 332 பேர். எகிப்தியர்கள் 147 பேர். பாகிஸ்தானியர்கள் 98 பேர். ஆங்கிலேயர்கள் 96 பேர் மற்றும் இதர நாட்டினர்.
என்ன யோசிக்கிறீங்க??
தகவல்: ரஃபீக் சுலைமான் ( முகநூல் பதிவு)
படம் உதவி: துபை போலீஸ்