ஜெனிவா: துபாய் இளவரசி லத்தீஃபா பிந்த் முகமது அல் மக்தோம், உயிருடன்தான் உள்ளார் என்பதற்கான நிரூபணத்தை, அந்நாடு இன்னும் தன்னிடம் வழங்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.மன்றம்.

தற்போதைய துபாய் ஆட்சியாளரின் மகளான லத்தீஃபாவிற்கான, “உயிர்வாழும் நிரூபணம்” ஆவணத்தைக் கேட்டுள்ளார் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஹை கமிஷனர்.

“நாங்கள் இதுவரை அந்த அத்தாட்சியைப் பெறவில்லை. அதை நாங்கள் விரைவில் பெற விரும்புகிறோம். அதுதான் எங்களின் முதல் கவலையாக இருக்கிறது. இதுதொடர்பாக, ஐ.நா.மன்றத்திற்கான புதிய அமீரக தூதர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த முயன்றோம். ஆனால், ‍அதற்கான தேதியை இன்னும் இறுதிசெய்ய முடியவில்லை” என்றுள்ளார் அவர்.

மருத்துவ உதவியைப் பெற இயலாத வகையில், லத்தீஃபா அடைத்து வைக்கப்பட்டிருப்பதாய் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அப்படியெல்லாம் இல்லை என்று அரசு குடும்பத்து வட்டாரங்கள் மறுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.