வாத்துக்கள் நீந்துவதால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறதாம்: திரிபுரா பாஜ முதல்வரின் மற்றொரு ‘கண்டுபிடிப்பு’

ருத்ரசாகர்:

திரிபுரா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநில பாஜ முதல்வர் பிப்லப் குமார் தேப் (Biplab Kumar Deb) நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துவதால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது என்று புதிய விளக்கம் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இவர்தான் ஏற்கனவே, மகாபாரத காலத்திலேயே இணைய வசதி இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வாத்துக்களால்  ஆக்சிஜன் பெருகுவதாக கூறி உள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் உள்ள ருத்ரசாகர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பிப்லப் தேப், அந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 50ஆயிரம்  வாத்து குஞ்சுகள் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மொத்தமாக 50 ஆயிரம் வாத்துகள் தண்ணீரில் நீச்சல் அடிக்கும்போது, தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகமாகும். தண்ணீரும் மறுசுழற்சி அடையும் என்றவர், இதன் காரணமாக தண்ணீரில் வசிக்கும்  மீன்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்று கூறினார்.

திரிபுரா முதல்வரின் இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.