டோக்கியோ

டந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பான் மைக்ரோசாப்ட் நடத்திய வாரத்தில் 4 நாட்கள் வேலை சோதனையில் 40%  உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஜப்பான் நாட்டில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகப் பல நிறுவன ஊழியர்கள் அதிக நேரம் பணி புரிய நேரிடுகிறது.  அத்துடன் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதும் அந்நாட்டுக்கு மற்றொரு பிரச்சினையாக உள்ளது.   எனவே ஜப்பான் அதிபர் அங்குள்ள ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைக்கலாம் என ஆலோசனை அளித்தார்.

இதையொட்டி ஜப்பானில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்னும் சோதனை திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தியது.   அத்துடன் இந்த சோதனை காலத்தில் தனது ஊழியர்களை பெரும்பாலும் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுடன் உரையாடவும் யோசனை தெரிவித்தது.   அத்துடன் இந்த உரையாடலைச் சுருக்கமாக 30 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் கூறியது.

இந்த சோதனைகளை குறித்து ஆய்வு செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மைக்ரோசாப்ட் ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் பணி புரியும் சோதனை நடைபெற்றது.  இந்த நாட்களில் ஆனலைன் மூலம் வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் உரையாடினார்கள்.

இதன் மூலம் 23% மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது    அது மட்டுமின்றி காகிதச் செலவும் 59% குறைந்துள்ளது.  குறிப்பாக ஒவ்வொரு ஊழியர்களின் சராசரி உற்பத்தி இந்த கால கட்டத்தில் 40% வரை அதிகரித்துள்ளது.  இது போல் மற்றொரு சோடனை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஒரு சில ஊழியர்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.   இதில் பல மேலாளர்களும் உள்ளனர்.  இவர்கள் வாரத்தில் குறைவான நாட்கள் பணி புரிவது வாடிக்கையாளர்களுக்குச் சிரமத்தை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.