டில்லி

டில்லி நகரில் காற்று மாசு காரணமாக மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் பாரை நாட வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது.

உலகெங்கும் காற்று மாசாவது அதிகரித்து வருகிறது.   அதனால் பல வெளிநாடுகளில் மக்களுக்கு சுவாசிக்கச் சுத்தமான காற்று கிடைப்பது கடினமாகி உள்ளது.   உலகில் அதிகமாகக் காற்று மாசு உள்ள நகரங்களில் இந்தியத் தலைநகர் டில்லியும் ஒன்றாகும்.   டில்லியில் உள்ள காற்றின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது.   கடந்த ஒரு மாதமாக நகரில் காற்று மாசு அதிகரிப்பு தீவிரமாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதாகும் என ஒரு சிலரும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளே காரணம் என வேறு சிலரும் கூறி வருகின்றனர். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி நகர் ஒரு வாயு உருளை போல் உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்   அந்த அளவுக்குக் காற்று மாசு டில்லியை பாடாய்ப் படுத்தி வருகிறது..

 

இதையொட்டி டில்லியில் மக்கள் சுவாசிக்க வசதியாக ஆக்சிஜனை அளிக்கும் பாரில் கூட்டம் அதிகரித்து வருகின்றது.   கடந்த மே மாதம் டில்லியில் ஆக்சி பியூர் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த ஆக்சிஜன் பார் இந்தியாவின் முதல் ஆக்சிஜன் பார் ஆகும்.   உலகின் பல நாடுகளில் இத்தகைய வசதி உள்ள போதிலும் இந்தியாவுக்கு இதுவே முதல் முறையாகும்.

தற்போது காற்று மாசு காரணமாகப் பலரும் சுத்தமான ஆக்சிஜனை தேடி இங்கு வருகின்றனர்.   இங்குப் பல விதமான நறுமணங்களுடன் உள்ள ஆக்சிஜனை 15 நிமிடங்கள் சுவாசிக்க ரூ.299 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த கட்டணம் நறுமணத்தை பொறுத்து மேலும் அதிகரிக்கிறது.   தற்போது சாகெட் பகுதியில் உள்ள இந்த ஆக்சிஜன் பார்லரின் கிளை விரைவில் டில்லி விமான நிலையத்தில் தொடங்க உள்ளது.

குழாய் வழியாக வரும் ஆக்சிஜனை மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தினம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆக்சிஜனை சுவாசிப்பதன் மூலம் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரித்து மாசினால் ஏற்படும் தீங்குகளை எதிர்க்க உடல் வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.