அட்சய திருதியை : தமிழ்நாட்டில் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை

சென்னை

நேற்று அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகத்தில் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை ஆகி உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திரிதியை அட்சய திருதியை என கொண்டாடப் படுகிறது.   இந்த நாள் அதிர்ஷ்ட நாள் எனவும் இன்று தங்க வாங்கினால் வீட்டில் தங்கம் மேன்மேலும் பெருகும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.   அதனால் அட்சயதிருதியை அன்று ஒரு கிராம் தங்க நகையாவது வாங்க வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர்.

நேற்று அட்சய திருதியை தினம் என்பதால்  காலை முதலே நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் அலை மோதியது.    ஒரு சில நகைக்கடைகளில் தங்க நாணயம் மட்டும் வாங்குவோருக்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்க்கப்பட்டிருந்தன.    அதே நேரத்தில் பல கடைகளில் நகை வாங்க மக்கள் குவிந்ததால்  கடையில் நெரிசல் உண்டாகியது.   அதனால் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை மட்டும் உள்ளே அனுப்பி அவர்கள் வெளியேறியதும் அடுத்து நின்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து தங்க நகை வியாபாரிகள், “நேற்று முன் தினத்தை விட நேற்று அட்சய திருதியை அன்று லேசாக தங்கம் விலை உயர்ந்தது.   இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர்.   தங்கத்தைப்  போலவே வெள்ளி விலையிலும் உயர்வு ஏற்பட்ட போஒதிலும் வெள்ளிப் பொருட்களும் நன்கு விற்பனை ஆகின.

நேற்று மட்டும் தமிழகம் முழுவதுமாக சுமார் 6 ஆயிரம் கிலோ வரை தங்க நகைகள் விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வந்துள்ளன.   இன்று முழுக் கணக்கும் கிடைத்த பின்  சரியான தகவல்கள் தெரிய வரும்.    அநேகமாக நேற்றைய தங்க விற்பனை 6 ஆயிரம் கிலோவை தாண்டும் என நம்புகிறோம்” என தெரிவித்தனர்.