திருவனந்தபுரம்

ட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12 வகுப்புத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இதையொட்டி மாநிலத்தில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.    தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் வாக்கெடுப்புக்கு பள்ளிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

கேரள மாநிலத்தில் இந்த மாதம் 17 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது பள்ளிகளை வாக்குச்சாவடிகளாகப் பயன்படுத்த உள்ளதாலும் ஆசிரியர்களுக்குத் தேர்தல் பணிகள் உள்ளதாலும் தேர்வுகள் நடத்த முடியாத நிலை உண்டாகி உள்ளது.

இதையொட்டி அம்மாநில தேர்தல் அலுவலர் இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க அனுமதி கோரி  தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தேர்வுகளை ஒத்தி வைக்க அனுமதி அளித்துள்ளது.   இந்த தேர்வுகள் ஏப்ரல் 8 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.