வாகன உதிரி பாகங்கள் விற்பனை சரிவு : 10 லட்சம் பேர் பணி இழப்பு அபாயம்

டில்லி

வாகன உதிரி பாகங்கள் விற்பனை சரிவால் சுமார் 10 லட்சம் பேர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  பல பெரிய வாகன முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடத் தொடங்கி உள்ளனர்.    பெரும்பாலான வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.   இதனால் வாகன் உற்பத்தி மட்டுமின்றி உதிரி பாகங்கள் உற்பத்தியும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அகமா என அழைக்கப்படும் அகில இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ராம் வெங்கடரமணி, “வாகன உற்பத்தி  நிறுத்தத்தால் உதிரி பாகங்கள் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.   ஏற்கனவே வாகன உதிரிபாகங்களில் 70% பாகங்கள் 18% ஜிஎஸ்டி யின் கீழ் கொண்டு வரப்பட்டதால் விற்பனை பாதிப்பு ஏற்பட்டது.   மீதமுள்ள 30% பாகங்கள் 28% ஜிஎஸ்டியின் கீழ் உள்ளன.

தற்போது விற்பனை அடியோடு நிற்கும் நிலை உண்டாகி இருக்கிறது.     இந்த நிலை  எவ்வாறு சீரடையும் என்பது தெரியாத நிலை உள்ளது.   உடனடியாக அரசு இதில் தலையிட்டு மாற்றங்கள் செய்து இந்த தொழிலை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.  இந்த விற்பனை சரிவால் பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது.  இதனால் சுமார் 10 லட்சம் பேர் வரை பணி இழக்க நேரிடும்.

இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவார்கள்.   இதனால் இவர்களுக்கு பணி இழப்பீடு எதுவும் கிடைக்க வாயப்பில்லை.   தற்போது உலகெங்கும் மின்சார வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து வருகின்றன.  எனவே எங்களால் ஏற்றுமதி செய்வதும் இயலாத நிலை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.