பெங்களூரு

மோசமான வானிலை காரணமாகப் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நகரில் விமானச் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

\தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள புல்புல் புயல் காரணமாக ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடும் வானிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.   மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

நேற்று மாலை ஆறு மணி முதல் கொல்கத்தா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.  அங்கிருந்து செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.   புயல் முன்னெச்சரிக்கை காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மோசமான வானிலையின் எதிரொலி காரணமாக பெங்களூரு நகரிலும் விமானச் சேவை கடுமையாக  பாதிக்கபட்டுள்ளது.    பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்கும் மற்றும் அங்கிருந்து கிளம்பும் விமானங்களுக்கு மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. இது பயணிகளுக்கு மிகவும் அதிருப்தியை அளித்துள்ளது.