சமையல் எண்ணெய் இறக்குமதி தடையால் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமா?

டில்லி

த்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளதால் நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.

நம் நாட்டில் பெருமளவில் சமையல் எண்ணெய் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.    அங்கிருந்து கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு இங்குச் சுத்திகரிக்கப்படுகிறது.    அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலும் இறக்குமதி செய்யப்படுகிறது.  இவ்வாறு நாட்டின் மொத்த தேவையில் 50% சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

காஷ்மீர் மாநில விவகாரம் மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மலேசியா எதிர்ப்பு கருத்து தெரிவித்தது.  இதனால் மத்திய அரசு மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்குக் கட்டுப்பாடு  விதித்தது.    அதற்கு பதிலாக இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்துக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்தது.

நமது நாட்டின் முழுத் தேவைக்கும் இந்தோனேசிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் போதுமானதாக இருக்காது என தெரிய வந்துள்ளது.  இதனால் நாட்டில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த தட்டுப்பாடு காரணமாக எண்ணெய் விலை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து பொருளாதார நிபுணர்கள் அரசின் முடிவைக் குறை கூறி உள்ளனர்.  தற்போது மலேசிய எண்ணெய் இறக்குமதிக்கு அதிகாரப் பூர்வமாக முழு தடை விதிக்கவில்லை எனினும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்த நிலை தொடர்ந்தால் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என பொருளாகும் எனவும் இதனால் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயரும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.