டில்லி

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு இல்லாததால் பல வெளிநாடுகளின் நட்பை இந்தியா இழந்து வருவதாக வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சுமார் 15 தினங்களுக்கு மேலாகியும் நாடெங்கும் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது.  இதனால் மத்திய பாஜக அரசுக்குப் பொதுமக்களிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.  அதே வேளையில் இந்தியாவின் நட்புறவு நாடுகள் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்த போதிலும் உள்ளூர இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக புல்வாமா தாக்குதல், பலகோட் விமானத் தாக்குதல், காஷ்மீரில் விதி எண் 370 விலக்கல், அயோத்தியா தீர்ப்பு குறித்த பல விவகாரங்கள் குறித்து அரசு உலக நாடுகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.   ஆனால் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து எவ்வித விளக்கமும் அளிக்காமல் உள்ளது.   இந்த விவகாரம் இந்தியாவை மட்டுமின்றி மூன்று அண்டை நாடுகளையும் உள்ளடக்கியதாகும்.

இது குறித்து ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதர்கள் மிகவும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த திருத்தத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து குடி புகுந்தோரில் இஸ்லாமியரைத் தவிர மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என இருந்தும் விளக்கம் அளிக்காதது அவர்களை அதிருப்தி கொள்ள செய்துள்ளது.

அத்துடன் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரிவினரும் கலந்துக் கொள்வதால் இது முழுக்க முழுக்க முழுக்க அரசுக்கு எதிரான போராட்டம் என தூதர்கள் கருதுகின்றனர்.   இதன் காரணமாக வங்கதேச வெளியுறவு மற்றும் உள்ளுறவு அமைச்சர்களும் ஜப்பான் பிரதமரும் தங்கள் இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக் கொண்ட பிரமிளா ஜெய்பால் கலந்துக் கொண்ட சந்திப்பில் பங்கேற்க மறுத்தார்.  இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான எலிசபெத் வாரன் மற்றும் பீட்டர் பட்டிஜீக் ஆகியோர் பிரமீளாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.   இதுவும் உலக நாடுகளிடையே இந்தியாவுக்கு ஒரு  பின்னடைவாகும்.

ஐரோப்பிய நாட்டின் தூதர் ஒருவர், “இந்தியாவின் பிம்பம் வெளிநாடுகளிடையே நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது.  தற்போது வரும் போராட்டக்காரர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடு மற்றும் அடக்குமுறை குறித்த செய்திகள் இந்திய நிலையை மிகவும் பலவீனப்படுத்தி வருகின்றன.   இது இந்திய அரசின் சகிப்பின்மையைக் காட்டுவதாகப் பல நாட்டு மக்கள் பேசி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் குடியிருப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஒரு ஜெர்மன் மாணவர் மற்றும் நார்வே சுற்றுலாப்பயணி ஆகியோர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  இதற்கு ஜி 20 நாடுகளில் ஒன்றின் தூதுவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அது மட்டுமின்றி வங்கதேசம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவைக் குறித்து எச்சரித்துள்ளன.

இந்தியாவின் நட்பு நாடுகள் எனக் கூறப்படும் நாடுகள் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் கூறிய போதிலும் அந்நாட்டுத் தூதர்கள் தங்கள் நாடுகளுடனான நட்பை இந்தியா இழந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.   மேலும் பல தூதர்கள் தங்கள் நாட்டு அரசுக்கு இந்திய அரசின் மீதான நல்லெண்ணம் மறைந்து வருவதாகவும் கூறி உள்ளனர்.

நன்றி : THE INDIAN EXPRESS