டில்லி

ஸ்பைஸ்ஜெட் நிறுவன பயணிகள் விமானம் ஒன்று சிறு தவற்றால் பாகிஸ்தான் போர் விமானங்களால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானம் எஸ்.ஜி -21 டெல்லியில் இருந்து காபூலுக்கு சுமார் 120 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது  அப்போது பாகிஸ்தான் எஃப்16 ரக போர் விமானங்கள் இந்த விமானத்தைச் சூழ்ந்துள்ளன.  விமானங்கள் இடைமறித்ததும், ஸ்பைஸ்ஜெட் விமானி, பாகிஸ்தான் எஃப் -16 ஜெட் விமானிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமானி”இது ஸ்பைஸ்ஜெட், இந்தியப் பயணிகள் விமானம், இது பயணிகளை ஏற்றிச் செல்கிறது. ஷெட்யூல்படி காபூலுக்குச் செல்கிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.  இவ்வாறு  எஃப் -16 பாகிஸ்தான் போர் விமானங்கள் ஸ்பைஸ்ஜெட்டை சுற்றி வளைத்தபோது, பாகிஸ்தான் ஜெட் விமானங்களையும், அவற்றின் விமானிகளையும் நமது பயணிகளால் தெளிவாகப் பார்க்க முடிந்ததாக்க கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் அன்றைய தினம், பயணித்த ஒருவர், பெயர் தெரிவிக்காமல், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், “பாகிஸ்தான் போர் விமானி ஸ்பைஸ்ஜெட் விமானிக்குக் கையை ஆட்டி விமானத்தின் பறக்கும் உயரத்தைக் குறைக்க அறிவுறுத்தியதை நாங்கள் பார்க்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

விமானங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீடு உள்ளது.  அதன்படி ஸ்பைஸ்ஜெட் விமானம் ‘எஸ்.ஜி’ என்ற குறியீட்டால், அழைக்கப்படுகிறது.   ஆனால் இது பாகிஸ்தான் விமானப்படைக்கு எப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தியது என புரியவில்லை.   இந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் குறியீடு ‘ஐ.ஏ’ என்று தவறாகப் புரிந்துகொண்டு, பாகிஸ்தான் விமானப்படை இவ்வாறு இடைமறித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது  இந்த குறியீட்டுக்கு இந்திய ராணுவம் அல்லது இந்திய விமானப்படை என்பது அர்த்தமாகும்

அதே வேளையில் ஸ்பைஸ்ஜெட் விமானி  பாகிஸ்தான்  போர் விமானிகளுக்கு உரிய விளக்கத்தை அளித்தபோதிலும் பாக். விமானிகளின் அச்சம் தீரவில்லை.   அதனால் ஆப்கானிஸ்தானுக்குள் இந்திய விமானம், நுழையும் வரை பாகிஸ்தான் போர் விமானங்கள், ஸ்பைஸ்ஜெட்டை பின்தொடர்ந்து வந்துள்ளன.  இந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் இருந்து வெளியேறியதை உறுதி செய்த பிறகு பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பியுள்ளன.