கொரோனா : 11000 கைதிகளை பரோலில் விடுவிக்கும் மகாராஷ்டிர அரசு

மும்பை

கொரோனா பரவுவதை தடுக்க மகாராஷ்டிர அரசு 7 வருடம் வரை தண்டனை பெற்றுள்ள 11000 கைதிகளை பரோலில் விடுதலை செய்ய உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிக அளவில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.  நாடெங்கும் மொத்தமுள்ள 694 கொரோனா நோயாளிகளில் 124 பேர் மகாராஷ்டிராவில் உள்ளனர்.  இந்தியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 16 ஐ எட்டி உள்ளது.

மக்கள் அதிகமாக கூடும் போது கொரோனா பரவ மிகவும் அதிக வாய்ப்புள்ளது.  எனவே கூட்டத்தைக் குறைக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளது.   அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் சிறைச்சாலையும் ஒன்றாகும்.   எனவே இங்குக் கூட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசுகளும் முயன்று வருகின்றன.

அவ்வகையில் மகாராஷ்டிர அரசு 11000 கைதிகளை விடுவிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், “கொரோன பரவுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிறையில் கூட்டத்தைக் குறைக்க 7 வருடங்கள் மற்றும் அதற்குக் குறைவாகத் தண்டனை பெற்றுள்ள 11000 கைதிகளை பரோலில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்.  இது மாநிலத்தில் உள்ள 60 சிறைகளுக்கும் பொருந்தும்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

You may have missed