கொரோனாவால் ரொக்க பரிவர்த்தனை 50% குறைவு : கணக்கெடுப்பு முடிவு 

டில்லி

கொரோனா தாக்குதல் காலத்தில் ரொக்க பரிவர்த்தனை 50% வரை குறைந்துள்ளதாகக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

பணமதிப்பிழப்பு காலத்தில் ரொக்கப் பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.  அதையொட்டி டிஜிடல் பரிவர்த்தனை அதிகரித்தது.   அதன் பிறகு ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டது.  அப்போது ரொக்கப் பரிவர்த்தனை மேலும் குறைந்து டிஜிடல் பரிவர்த்தனை அதிகரித்தது.  தற்போதைய நிலை குறித்து ஒரு ஊடகம் கணக்கெடுப்பை எடுத்து இன்று அதன் முடிவு வெளியாகி உள்ளது.

இந்த கணக்கெடுப்பு 300 இந்திய மாவட்டங்களில் நடந்துள்ளது.  இதில் கலந்து கொண்டவர்களில் 51% பேர் முதல் கட்ட நகரங்களிலும் 34% பேர் இரண்டாம் கட்ட ஊர்களிலும் மீதமுள்ளோர் 3 மற்றும் 4 ஆம் கட்ட நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ளவர்கள் ஆவார்கள்.  இதில் 69% ஆண்கள் மற்றும் 31% பேர் பெண்கள் ஆவார்கள்.

இந்த கணக்கெடுப்பில் 48% பேர் தங்கள் செலவுகளை ரசீது இல்லாமல் செய்வதால் ரொக்க பரிவர்த்தனையாகச் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.  மீதமுள்ளோர் டிஜிடல் பரிவர்த்தனை மூலமே பெரும்பான்மை செலவுகளைச் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

சென்ற வருட கணக்கெடுப்பில் 27% பேர் மட்டும் டிஜிடல் பரிவர்த்தனை செய்வதாகக் கூறி இருந்தனர்.   தற்போது 50% பேருக்கும் அதிகமானோர் டிஜிடல் பரிவர்த்தனைக்கு மாறி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலத்தில் ரொக்க பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதே என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரொக்க பரிவர்த்தனை பொதுவாக மளிகை மற்றும் வீட்டுப் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன.   அதிலும் அதிகபட்சமாக ரசீது இல்லாமல் செய்வோர் மட்டுமே ரொக்க பரிவர்த்தனையைச் செய்துள்ளனர்.  பெரும்பாலும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கப்பட்டதாலும் ரொக்க பரிவர்த்தனை குறைந்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் கருப்புப் பணப்புழக்கம் மேலும் குறையுமா எனக் கேட்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்தவர்களில் 38% பேர் அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அவசியம் தங்கள் சொத்துக் கணக்கு அளிக்க வேண்டும் என சட்டம் இயற்றப்படடால்  மட்டுமே கருப்புப் பணப் புழக்கம் குறையும் எனத் தெரிவித்துள்ளனர்.    மேலும் 33% பேர் அனைத்து சொத்துக்களின் உரிமையும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் எனக் கூறி உள்ளனர்.