கொரோனா: மகாராஷ்டிராவில் முட்டை விலை திடீர் உயர்வு

மும்பை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவில் முட்டை தேவை அதிகரித்து முட்டை விலை உயர்ந்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது.  மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.   கொரோனாவை தடுக்க அரசு பல முறைகளில் பிரச்சாரம் செய்து வருகிறது.  அவ்வகையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவு வகைகளை கொரோனா எதிர்ப்பு மருத்துவர்கள் சிபாரிசு செய்து வருகின்றனர்.

இந்த உணவு வகைகளில் முட்டையும் ஒன்றாகும்.   கொரோனா எதிர்ப்பு மருத்துவர்கள் இவ்வாறு சிபாரிசு செய்துள்ளதால் பலரும் முட்டைகளை உண்ணத் தொடங்கி உள்ளனர். இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் முட்டைகளின் தேவை 25% அதிகரித்துள்ளதாகத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

அதிக அளவில் பாதிப்புள்ள புனேவில் தற்போது ஒரு நாளைக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் முட்டைகள் தேவை உள்ளன.   ஆனால் இங்கு தினசரி 25 லட்சம் முட்டைகள் மட்டுமே பண்ணைகளில் இருந்து கிடைத்து வருகின்றன.

மாநிலம் எங்கும் இதே நிலை நீடிப்பதால் முட்டையின் விலை ரூ. 5லிருந்து 6 ஆக அதிகரித்துள்ளது.  ஒரு சில இடங்களில் ரூ.7க்கு விற்கப்படுகிறது.