டில்லி

நாடெங்கும் கொரோனாவால் தேர்வுகள் நடக்காததால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் கடந்த 24 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்குத் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    அனைத்து மாநிலங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு இன்றி அடுத்த வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை இதே உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.  பல்கலைக்கழக தேர்வுகள் இதுவரை நடக்கவில்லை.

அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புக்கள் விரைவில் தொடங்கப்பட வேண்டிய நிலையில் இந்த வருடத்துக்கான தேர்வுகள் இன்னும் நடைபெறாததால் கடும் சிக்கல் உண்டாகி உள்ளது.  இதற்குத் தீர்வு காண மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது.   இந்தக் குழு அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்பு தொடக்கத்தைத் தாமதப்படுத்தி அட்டவணைகளை மாற்ற திட்டமிட்டுள்ளது.

அதே வேளையில் பல மாணவர்கள் வெளிநாடுகளில் தங்கள் மேற்படிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.  இதுவரை தேர்வுகள் நடக்காததால் அவர்களால் மேற்படிப்பில் சேர இயலாத நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.   தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்னும் அச்சத்தில் உள்ள மாணவர்களின் நலனைக் கருதி ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அரசுக்குக் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.