‘’வெளியே போ..’’ கண்டித்த மகன்.. கண் கலங்கிய தாய்..

வெளியூருக்குச் சென்று விட்டு, கிராமத்துக்குத் திரும்பிய தாயை, கொரோனா அச்சம் காரணமாகப்  பெற்ற மகனே தடுத்து நிறுத்தியுள்ளான்.

கோயில் விழாவோ, கொரோனாவோ-

கட்டுப்பாடு தான் முக்கியம் என்பதில் கிராமத்து மக்கள் கறாராக இருப்பார்கள் என்பதை உலகுக்கு எடுத்துச்சொல்லும் வகையிலான சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே நடந்தேறியுள்ளது.

அங்குள்ள கோசை பல்லி கிராமத்துப் பஞ்சாயத்தார், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊர் எல்லையில் தடிகளுடன் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவன், சாய் கவுட்.

அந்த பையனின் தாயார் துல்சம்மா, உறவினர் வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் சென்று விட்டு, ஊர் திரும்பினார்.

எல்லையில் காவல் பணியில் இருந்த சாய் கவுட், தாயை ஊருக்குள் விட மறுத்து விட்டான்.

‘’வெளியே சென்று விட்டு வரும் யாரும் கிராமத்துக்குள் நுழைய அனுமதி இல்லை. உன்னை அனுமதித்தால் அது, ஊர் சட்டத்தை மீறிய செயலாகிவிடும்’’ என்று கறாராகத் தெரிவித்து, ‘’ ‘பக்கத்து ஊரில் உள்ள சொந்தக்காரர் வீட்டில் தங்கிக்கொள்’’ என்று கூறி விட்டான்.

ஊருக்குள் நுழைய மகன் அனுமதிக்காததால்,அந்த தாய் வேதனை அடைந்தாலும்-

மகனின் கடமை உணர்ச்சியைப் பார்த்துச் சிலிர்த்துப்போய், பக்கத்தில் உள்ள உறவினர் ஊருக்குக் கிளம்பிப் போனார்.

– ஏழுமலை வெங்கடேசன்