சென்னை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை அருகில் உள்ள ஹுண்டாய் கார் தயாரிக்கும் நிறுவனம் மூடப்பட உள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாகப் பல பெரிய தொழிலகங்கள் மூடப்பட்டு வருகின்றன.   தமிழகத்திலும் அதே நிலை ஏற்பட்டு வருகிறது.  சென்னை அருகில் உள்ள இருங்காட்டுக்கோட்டையில் உலகப் புகழ் பெற்ற ஹுண்டாய் கார் நிறுவனம் அமைந்துள்ளது.   இந்த நிறுவனம் இன்று முதல் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “ஹுண்டாய் மோட்டார் இந்திய நிறுவனம் ஒரு பொறுப்பான நிறுவனம் ஆகும்.   அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், மற்றும் சமுதாயத்தினர் ஆகியோரின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உடல்நிலை மீது ஒவ்வொரு சமயத்திலும் அக்கறையுடன் நடந்துக் கொண்டுள்ளது.

இதை மனதில் கொண்டு உலகெங்கும் பரவி வரும் கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை தொழிற்சாலையில் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளையும் வரும் 23 ஆம் தேதியில் இருந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

மீண்டும் பணியைத் தொடங்க மாநில அரசின் உத்தரவு வரும் வரை நாங்கள் காத்திருப்போம். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் வாரண்டியில் உள்ள வாகனங்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான இலவச  சேவைகள் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.