இனி நோ பிரசாதம் விபூதி  குங்குமம்… கோவிலுக்கு கொரோனா கண்ட்ரோல்..

 

ஆயிரம் சிக்கல்கள், பிரச்சினைகள், குடும்ப கஷ்டங்கள் என்று அல்லல்பட்டு அவதியுறும் மனதின் கடைசி புகலிடம் நமது கோவில்கள் தான்.  மனம் நிறைந்த கவலைகளுடன் கோவிலுக்குள் சென்று இறைவன் முகம் கண்டு, வழிபட்டு பிரசாதம், தீர்த்தமென வாங்கி இட்டு வெளியே வரும்போது மனம் முழுதும் நிம்மதி சூழ்ந்திருக்கும்.

ஆனால் இனி அதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன..  கொரோனா தொற்று காரணமாக, இனி கோவில்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்து வருகிறது அரசு நிர்வாகம்.  அதை தவறாது கடைப்பிடித்தே இறைவனை வணங்கிச்செல்ல வேண்டும்.

“பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும், 65 வயதிற்கு மேற்பட்டோருக்கும் அனுமதியில்லை.  அதே போலக் கர்ப்பிணிப் பெண்களும் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.  தற்போது நாங்கள் ‘நிலையான இயக்க நடைமுறை’களை செயல்படுத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம்” என்கின்றனர் இந்த அறநிலையத்துறை அதிகாரிகள்.

இனி அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் தொற்று அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி.  வாசலிலேயே சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.  அதில் கைகளைக் கழுவிய பின்னரே உள்ளே செல்ல அனுமதி.  பக்தர்கள் பை, கால்களைக் கழுவிய பின்னரே அனுமதிக்கப்படுவர். அப்போதும் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.  சமூக இடைவெளியுடன் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.  தெர்மல் ஸ்கேனிங் சிஸ்டம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.  சரியான இடைவெளியில் கோவில்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

மேலும் இனி எந்த கோவிலிலும் இந்த வருடக் கடைசி வரை பிரசாதமோ, விபூதி, குங்குமமோ வழங்கப்பட மாட்டாது.  அதே போலத் தீர்த்தத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  பெரிய கோவில்களில் உள்ள ஏர்கன்டிஷனர் 24 – 30 டிகிரி என்கிற அளவில் தான் இயக்கப்பட்ட வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியே நாம் இனி கோவில்களுக்குள் செல்ல முடியும்.  ஆனால் இத்தனை நாட்களாக ஆத்மார்த்தமாக இறைவனைச் சுதந்திரமாகத் தரிசித்து வந்த நமக்கு இனி கோவில்களுக்குச் செல்வதும், மருத்துவமனைக்குச் செல்வது போன்ற ஓர் உணர்வையே ஏற்படுத்தப்போகிறது என்பது உறுதி.

– லெட்சுமி பிரியா