சென்னை

சென்னையில் கொரோனா தாக்கம் காரணமாகக் கடந்த மார்ச் 23 முதல் நவம்பர் 1 வரை 1446 பேர்  அரசு வீடற்றோர்  இல்லங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 23 முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.   சென்னையில் பல வீடற்றோர் சாலை ஓரங்களில் தங்கி வருகின்றனர்.  இவர்களால் ஊரடங்கு விதிகள் காரணமாக அங்கிருந்து காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சியின் அரசு இல்லங்களில் தஞ்சம் புகுந்தனர்.

இவர்களைத் தவிர  மார்ச் 23 முதல் நவம்பர் 1 வரை 1446 பேர் இந்த வீடற்றோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாநகராட்சியின் வீடற்றோர் நல அதிகாரி, “ஒவ்வொரு மாதமும் 150க்கு மேற்பட்டோர்  இந்த இல்லங்களில் அனுமதிக்கப்படுகிறனர்.  பொதுவாக இங்கு அனுமதிக்கப்படுபவர்கள் 50 – 60 வயதானவர்கள் ஆவார்கள்.   இந்த கொரோனா பரவல் இவர்களுக்கு பொருளாதார பாதிப்பை மட்டுமின்றி மனநல பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இவர்களில் 70% பேர் நன்கு படித்தவர்கள் ஆவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் அல்லது பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் என்பது மிகவும் சோகமானதாகும்.   இவர்கள் பணி இழந்து வேறு பணி கிடைக்காததால் இந்த நிலைக்கு வந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் பலராலும் வயதானவர்களை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.  எனவே இவர்களும் பொருளாதார வசதி குறைந்தோரும் தங்கள் வீட்டு முதியோரை இங்கு அனுமதிக்கின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.