மும்பை ஐஐடியில் இந்த வருடம் முழுவதும் நேரடி வகுப்புக்கள் நடக்காது : இயக்குனர் அறிவிப்பு 

மும்பை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை ஐஐடியில் இந்த வருடம் முழுவதும் நேரடி வகுப்புக்கள் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில் மும்பை ஐஐடியும் ஒன்றாகும்.  இந்த கல்வி நிறுவனம் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  கொரோனா அச்சம் காரணமாக மும்பை ஐஐடியும் மூடப்பட்டுள்ளது.  தற்போது கொரோனாவின் தாக்கம் எப்போது முடியும் என்பது தெரியாத நிலை உள்ளது.  எனவே இதுவரை இந்த வருடத்துக்கான வகுப்புக்கள் இதுவரை மும்பை ஐஐடியில் தொடங்கப்படாமல் உள்ளது.

மும்பை ஐஐடியின் இயக்குனர் சுபாசிஸ் சவுத்ரி நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த செமஸ்டர் வகுப்புக்கள் முழுவதும் அதாவது இந்த வருடம் முடியும் வரை நேரடியாக நடைபெறாது.   மாணவர்கள் நலனை மனதில் கொண்டு இந்த ஆனலைன் வகுப்புக்கள் மட்டும் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.    மாணவர்கள் கல்வி கற்க இனியும் தாமதம் ஏற்படாத வண்ணம் விரைவில் ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கப்படும்.

மும்பை ஐஐடியில் பயிலும் பல மாணவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் ஆவார்.  இவர்களில் ஒருவரும் தங்கள் கல்விகற்றலை பணமின்மையால் தவற விடுவதை நாங்கள் விரும்பவில்லை.   எனவே மாணவர்கள் லாப்டாப் வாங்கவும் இணையக் கட்டணம் செலுத்தவும் நிதி உதவி அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

இதற்கு சுமார் ரூ.5 கோடி வரை பணம்  தேவைப்படுகிறது.  நமது கல்வி நிறுவனம் முன்னாள் மாணவர்கள் பெருமளவில் உதவ முன் வந்துள்ளனர்.  ஆனால் அது போதுமானதாக இல்லை.  எனவே பொதுமக்கள் தங்களால் இயன்ற தொகையை அது எவ்வளவு சிறிய தொகையாயினும் அளித்து உதவ வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை ஐஐடியின் 62 வருட  வரலாற்றில் இதுவரை மாணவர்கள் வகுப்பறைக்கு வராமல் வகுப்புக்கள் தொடங்கப்பட்டது இல்லை.   இதே முடிவை மற்ற ஐஐடிக்களும் எடுக்கலாம் எனவும் விரைவில் அனைத்து ஐஐடிக்களும் ஆன்லைன் வகுப்புக்களைத் தொடங்கலாம் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.