கொரோனா : மும்பை பிரபல ரியல் எஸ்டேட் அதிபரின் 20% விலை குறைப்பு

மும்பை

கொரோனா பாதிப்பு காரணமாக விற்பனைக் குறைவால் மும்பை நகரின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ஹீராநந்தானி தனது வீடுகளின் விலையை 20% குறைத்துள்ளார்.

கொரோனா பரவலால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  நாடெங்கும் பல கட்டுமான நிறுவனங்களின் ரூ.3.7 லட்சம் கோடி மதிப்புள்ள வீடுகள் விற்கப்படாமல் உள்ளன.  மும்பையில் உள்ள ஒர்லி பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட ரூ.40 கோடி மதிப்பிலான வீட்டை தற்போது ரூ.30 கோடிக்கு வாங்க ஆளில்லை.  அதையொட்டி அந்த வீட்டு உரிமையாளர் விலையை ரூ.20 கோடியாகக் குறைத்துள்ளார்.

மும்பை நகரில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான ஹீராநந்தானி குழுமம் கடந்த 1978 ஆம் வருடம் உருவாக்கப்பட்டது.   இந்த குழுமம் ரியல் எஸ்டேட், கல்வி, சுகாதாரம், மருத்துவமனைகள், தங்குமிடம், உள்ளிட்ட பல தொழில்களைச் செய்து வருகிறது.    இந்த குழுமத்தின் கட்டிடங்கள் பொவாய், மும்பை, தானே உள்ளிட்ட பல இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனம் மும்பை புறநகரான பொவாய் பகுதியில் கடந்த வருடம் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு குடியிருப்பு ஒன்றைக் கட்ட தொடங்கி உள்ளது.   அத்துடன் அதே பகுதியில் ரூ.2500 கோடியில் 115 ஏக்கர் பரப்பில் ஒரு தொழிற்கூடமும், ரூ.1000 கோடியில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவும் அமைத்து வருகிறது.   இந்த நிறுவனத்தின் பல குடியிருப்புக்கள் தற்போது உடனடியாக குடி புகத் தயார் நிலையில் விற்பனைக்கு உள்ளன்.

இவற்றை வாங்க யாரும் முன் வராததால் ஹீராநந்தானி நிறுவனம் தனது வீட்டில் விலையில் 20% வரை குறைத்து விற்பனை செய்ய முன்வந்துள்ளது.   சமீபத்தில் மும்பையில் உள்ள ஹீராநந்தானி பூங்கா என்னும் குடியிருப்பு பகுதியில் சுமார் ரு.1 கோடி மதிப்பில் விற்க வேண்டிய வீட்டை ரூ.19.136 லட்சம் குறைத்து விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.