ரோம்

ரோம் நகரில் உள்ள சியம்பினோ சர்வதேச விமான நிலையம் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டில் அதிகமாக உள்ளது.   அந்நாட்டின் வட கிழக்குப் பகுதியில் இந்த தாக்குதல் அதிகரித்துக்  காணப்படுகிறது.  ஆகவே அந்த பகுதி முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.  அங்கிருந்து மக்கள் வரவும் அங்கு மக்கள் செல்லவும் முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தற்போது இத்தாலி முழுவதும் கொரோனா பரவி வருகிறது.

இதையொட்டி இன்று முதல் இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் நகரில் உள்ள சியம்பினோ சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் தற்காலிகமாக மூடப்படுவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது. ஆயினும் பொதுவான விமான நிலையப் பணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள (ரன் வேக்கள்) ஓடுதளங்கள் எதுவும் மூடப்படவில்லை.  தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இத்தாலி நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது  கொரோனா அச்சுறுத்தல் முடிந்து அவசர நிலை நீக்கப்பட்ட பிறகு மீண்டும் இந்த விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீண்டும் திறக்கப்பட  உள்ளது.