வாட்ஸ்அப்  வதந்தியால் கோழிப் பண்ணைகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி இழப்பு

டில்லி

கொரோனா குறித்த வதந்திச் செய்தியால் இந்தியாவில்  உள்ள கோழிப்பணைகளுகு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.   இதில் அதிகமாக வதந்திகளே உள்ளன.  இந்த செய்திகளைப் பலரும் நம்பி அதை மேலும் பகிர்கின்றனர்.  இத்தகைய வதந்திகளின் உண்மைத்தன்மை மற்றும் அவை ஏற்படுத்தும் விளைவுகளைக் குறித்துப் பகிர்வோர் கருத்தில் கொள்வதில்லை.

கடந்த மாதம் முதல் வாரத்தில் பிராய்லர் கோழிகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அதனால் அதை யாரும் சாப்பிட வேண்டாம் எனவும் வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் வந்தன.  அத்துடன் அதை நிரூபிப்பது போல் இரண்டு கண் இழந்த கோழிகளின் புகைப்படங்களும் அந்த தகவல்களுடன் இணைக்கப்பட்டு வந்தன.  இதனால் பலரும் கோழிக்கறி உண்பதை அடியோடு நிறுத்தி விட்டனர்.

இதனால் கோழிப்பண்ணை அதிபர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.  சாதாரணமாக காய்கறி விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் ஒரு பகுதியில் கோழிப் பண்ணை அமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.  ஒரு பண்ணையில் 4000 முதல் 6000 வரை கோழிகள் வளர்க்கப்படும்.  இவற்றுக்கு முக்கிய தீவனமாகப் பயிர்கள் மற்றும் காய்கறிகள் அளிக்கப்படுவதால் இவை நன்கு வளர்ந்து 7 வாரங்களில் விற்பனைக்குத் தயாராகும்.

இந்த வாட்ஸ்அப் வதந்தி வந்த போது சீனாவில் இருந்து கேரளா வந்த மூன்று மாணவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது.  எனவே இந்த செய்தியைக் கோழிப்பண்ணை அதிபர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  ஆனால் அதற்கு நேர் மாறாக மக்கள் கோழிகள் வாங்குவதை நிறுத்தியதால் விற்பனை அடியோடு நின்று போனது  மத்திய மாநில அரசுகள் இந்த செய்தி பொய்யானது என அறிவிப்பு அளித்தும் எவ்வித பயனும் இல்லாத நிலை ஏற்பட்டது.

கோழிகள் லட்சக்கணக்கில் தங்கிப் போனதால் மகாராஷ்டிர விவசாயிகள் தங்கள் பண்ணையில் இருந்த கோழிகளை ரூ.5க்கும் 10க்கும் விற்கும் அவலம் உண்டானது.   அத்துடன் முட்டைகள் விலையும் மிகவும் குறைந்தது. இதனால் ஆட்டுக் கறி தாறுமாறாக விலை அதிகரித்தது.   இந்த விற்பனைக் குறைவால் நாடெங்கும் உள்ள கோழிப்பண்ணைகளில் ஒரு நாளைக்குச் சராசரியாக ரூ.160 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.  தற்போது அந்த இழப்பு ரூ.1 லட்சம் கோடியை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு விற்பனை ஆகாமல் தேங்கி விட்ட கோழிகளுக்குத் தீவனம் அளிக்க இயலாத நிலை ஏற்பட்டதால் அவற்றை இலவசமாக மக்களுக்கு அளிக்கவும் சிலர் முன் வந்தனர்.  ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அவற்றையும் வாங்கப் பொதுமக்கள் மறுத்துள்ளனர்.  இதனால் இந்த கோழிகளை உயிருடன் புதைத்து அழிக்கும் கொடூர நிலை ஏற்பட்டுள்ளது.  தெலுங்கானா போன்ற பல மாநிலங்களில் இந்நிலை அதிகமானதால் பொதுக் கூட்டங்களில் ஆளும் கட்சியினர் கோழிக்கறியை சாப்பிட்டு நிரூபித்த போதிலும் நிலை சீரடையாமல் உள்ளதாக பண்ணை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.