பீஜிங்

சீன நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவுதல் தீவிரம் அடைந்துள்ளதால் தலைநகர் பீஜிங்கில் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டுள்ளன.

கடந்த வருட இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  அது சீனா முழுவதும்  பரவி தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.  இதில் அதிகம் பாதிப்படைந்துள்ள அமெரிக்கா இந்த பரவலுக்குச் சீனாதான் காரணம் எனக் குற்றம் சாட்டி வருகிறது.   இந்நிலையில் சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.

சீனாவின் பீஜிங் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபடி மொத்த காய்கறி அங்காடி சென்று வந்தோருக்கு கொரோனா தாக்குதல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.   உடனடியாக அந்த அங்காடி மூடப்பட்டாலும் கடந்த 30 ஆம் தேதியில் இருந்து அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்று வந்துள்ளதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

சீன ஊடகங்கள், ”சீனத் தலைநகரான பீஜிங்கில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.   இது கொரோனா தாக்குதலின் இரண்டாம் கட்டம் ஆகும்.   இதனால் நாடெங்கும் பல பகுதிகளில் போர்க்கால அடிப்படையில்  அவசர நிலை அமல் படுத்தப்பட்டுள்ளது.   இதுவரை 106 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் பீஜிங்கில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடுமாறு கல்வித் துறை ஆணையிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளன.

அதன்படி இன்று முதல் பீஜிங்கில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.   பல பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன.  ஆயினும் சீன மக்கள் பீஜிங்கில் நிலைமை மோசமடைந்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.