ட்டனம் திட்டா

கொரோனா அச்சம் காரணமாகக் கேளிக்கை நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கேரள   நாடக நடிகை மஞ்சு என்பவர் ஆட்டோ ஓட்டுநராகி உள்ளார்.

கொரோனா பரவுதலைத் தடுக்க மக்கள் கூட்டம் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதனால் திரையரங்குகள், இன்னிசை நிகழ்வு, மேடை நாடகங்கள், சர்க்கஸ் போன்ற அனைத்து கேளிக்கை நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இந்த தடையால் மேடை நாடகக் கலைஞர்கள், இன்னிசை கலைஞர்கள், எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரான மேடை நாடக நடிகை மஞ்சு பட்டணம் திட்டா மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்.    இவருக்குக் கலை ஆர்வம் அதிகம் உள்ளதால் மேடை நாடகக் கலையைத் தேர்வு செய்தார்   பல புராண நாடகங்களில் நடிக்கும் மஞ்சுக்குக் கேரளாவில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.   இவர்களது நாடகம் நள்ளிரவு வரை நடந்த போதிலும் ரசிகர்கள் இவர் நடிப்பைப் பார்த்து ரசித்து வந்தனர்.

நாடகம் முடிந்து நள்ளிரவு வீடு திரும்ப வசதியாக மஞ்சு ஆட்டோ ஒன்றை வாங்கினார். பொதுவாக மேடை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் கலைஞர்கள் காயங்குளம் பகுதியில்  இருந்து நிகழ்ச்சி அமைப்பாளரின் வாகனத்தில் செல்வார்கள்.  அதைப்போல் நிகழ்ச்சி முடிந்ததும் காயங்குளத்துக்கு அதே வாகனத்தில் வருவார்கள்.  நடிகை மஞ்சு தனது சொந்த ஊரில் இருந்து காயங்குளம் சென்று வர தனது ஆட்டோவை பயன்படுத்தி வந்தார்.

கேளிக்கை நிகழ்வுகள் தடை காரணமாக நாடக வாய்ப்பை முழுவதுமாக இழந்துள்ள நடிகை மஞ்சு தற்போது முழு நேர ஆட்டோ ஓட்டுநராக மாறி உள்ளார். நடிகை மஞ்சு இது குறித்து, “நான் உறுப்பினராக உள்ள கேரள மக்கள் கலைக்கழகம் என்னும் அமைப்பிடம் பணம் கடன் வாங்கி ஆட்டோ வாங்கி உள்ளேன்.  எனது நிகழ்வுக்கான ஊதியத்தில் இருந்து ஆட்டோவுக்கான கடனுக்குப் பிடித்துக் கொள்வது வழக்கம்.

தடை காரணமாக எனக்கு நாடக வாய்ப்பு இல்லாததால் நான் முழு நேரமும் ஆட்டோ ஓட்டுகிறேன்.  கொரோனா அளித்த புதுத் தொழிலால் எனக்குச் செலவு போகு தினம் ரூ.300 வருமானம் வருகிறது.   கொரோனா விழிப்புணர்வு நாடகங்களை அரசு சார்பில் நடத்தி அதில் எங்களைப் போல் கலைஞர்களைப் பயன்படுத்தினால் பல கலைஞர்களுக்குப் பிழைப்பு கிடைக்கும்” எனச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.