பாரிஸ்

பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் கை குலுக்குவது மற்றும் கன்னத்தில் முத்தமிடுவது உள்ளிட்ட வழக்கங்கள் கொரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டில் ஒருவருக்கொருவர் இரு கை கூப்பி வணக்கம், நமஸ்தே, நமஸ்காரம் எனச் சொல்லும் பழக்கம் உள்ளது.  சமீப காலமாக ஆண் பெண் பேதமின்றி கட்டிப்பிடிக்கும் பழக்கம் பரவி வருகிறது.  ஆனால்  பல வெளிநாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளில் கை குலுக்குவது, கன்னத்தில் முத்தமிடுவது ஆகிய வழக்கங்கள் சாதாரணமான பழக்கமாகும்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது கை குலுக்குவது, கன்னத்தில் முத்தமிடுவது ஆகியவற்றுக்கு நோ சொல்லப்பட்டுள்ளது.   இந்த விவகாரத்தில் பலரும் ’நேர் கொண்ட பார்வை; அஜித் போல நோ என்றால் நோ தான் என மிகவும் கடுமையாக உள்ளனர்.  கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கிய சீனாவில் கை குலுக்க வேண்டாம் எனவும் முந்தைய பழக்கப்படி கை அசைத்து அல்லது ஹலோ எனச் சொன்னால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் முதலில் பிரான்சில் இந்த கை குலுக்கும் மற்றும் கன்னத்தில் முத்தமிடும் பழக்கம் நிறுத்தப்பட்டது.   கை குலுக்குவது பிரஞ்சு கலாச்சார வழக்கம் இல்லை எனவும்  அது சமீபத்தில் வந்தது எனவும் ஊடகவியலர்  பிலிப் தெரிவித்துள்ளார்.  மாறாக கண்ணை நேருக்கு நேர் பார்த்து ஹலோ சொல்லலாம் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டில் மேலும் ஒரு படி போய் உள்ள அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் காப்பியையும் ஸ்டிரா மூலம் குடிக்க வேண்டும் எனவும் நேரடியாகக் கோப்பையில் இருந்து குடிக்க வேண்டாம் எனவும் அறிவுரை அளித்துள்ளது   ஜெர்மனி நாட்டின் அதிபர் ஆஞ்சலா மார்கெல் கை குலுக்க வந்த போது அந்நாட்டு அமைச்சர் கை கொடுக்காத தகவல் இணையத்தில் வைரலானது.

ஸ்பெயின் நாட்டில் ஈஸ்டர் சமயத்தில் கன்னிமேரியின் சிலையின் கைக்கு முத்தம் கொடுப்பது முக்கிய வழக்கமாக இருந்தது.   பக்தர்கள் பலரும் வரிசையில் நின்று மேரி மாதா சிலையின் கை மற்றும் பாதிரியாரின் கைகளுக்கு முத்தம் கொடுத்து ஆசி பெறுவார்கள்.  பண்டிகைக்கு வெகு சில நாட்களே உள்ள நிலையில் அந்த பழக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதைப் போல் கை குலுக்க வேண்டாம் எனவும் முத்தமிட வேண்டாம் எனவும் ரொமானியா, போலந்து,  ஈரான், ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   அமெரிக்க மற்றும் அரேபிய நாடுகளிலும் கை அசைத்து தங்கள் மரியாதையைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.