காஞ்சிபுரம்

நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இருபிரிவினரும் இணைந்து வழிபாடு நடத்தினர்.

வைணவர்களில் வடகலை மற்றும் தென்கலை என இரு பிரிவினர் உண்டு.   இந்த இரு பிரிவினரும் ஆழ்வார்களை ஏற்றுக் கொண்ட போதிலும் வடகலையினர் வேதாந்த தேசிகரையும் தென்கலையினர் மணவாள மாமுனிகளையும் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.  இவ்விரு பிரிவினரும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வழிபாடு செய்து வருகின்றனர்.

இரு பிரிவினரின் வழிபாடும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திருவிழா நேரங்களில் ஒரு பிரிவினரின் வழிபாடு மட்டும் நடத்த வேண்டும் என இரு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.  அதற்கு மற்ற பிரிவினர் ஒப்புக் கொள்ளாத நிலையில் இரு பிரிவினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.  ஒவ்வொரு திருவிழாவின் போதும் இந்த தகராறு நடப்பது சகஜமாகியது./

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், “கோவில் பூஜை நேரங்களில் முதலில் தென்கலையினர் தங்கள் குருவின் ஸ்ரீசைலேச தயாபாத்திரத்தில் முதல் இரு வரிகளைப்  பாட வேண்டும்.  அதன் பிறகு வடகலையினர் தங்கள் குருவின் ஸ்ரீ ராமானுஜ தயாபத்திரத்தில் இருந்து இரு வரிகள் பாட வேண்டும். பிறகு இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து பிரபந்தம் பாட வேண்டும்.

வழிபாட்டின் முடிவில் தென்கலை பிரிவினர் மணவாள முனிவரின் வாழித்திருநாமம் மற்றும் வடகலைப் பிரிவினர் தேசிகரின் வாழித் திருநாமம் பாடி நிறைவு செய்ய வேண்டும்..   வரும் மார்ச் 1 முதல் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்.” என் தீர்ப்பு அளித்தார்.  அந்த தீர்ப்பு நேற்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நிறைவேற்றப்பட்டது.

இதையொட்டி கோவில் நடை திறப்புக்கு முன்பே வந்திருந்த இரு பிரிவினரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.   இருவருக்கும் இடையில் மீண்டும் பிரச்சினை உருவாகும் என்பதால் இருவரும் எதிரும் புதிருமாக அமர கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளனர்.  நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பூஜைகளுக்கும் இந்த முறை கடைபிடிக்கபடும் எனக் கோவில் நிர்வாகம் அறிவித்தது.

நேற்று நீதிமன்ற உத்தரவுப்படி தென்கலை மற்றும் வடகலை வைணவர்கள் மாறி மாறி பாடலைப் பாடி வழிபாடு செய்தனர்.  நீண்ட காலமாக இரு பிரிவினருக்கும் இடையே இருந்த மோதல் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரு முடிவுக்கு வந்துள்ளதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.