பெய்ட்டி புயல் எதிரொலி : சென்னை மெரினாவில் கடல் சீற்றம்

சென்னை

சென்னை மெரினாவில் பெய்ட்டி புயல் எதிரொலியால் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. பெய்ட்டி என அழைக்கப்படும் இந்த புயல் இன்று அதி தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பெய்ட்டி புயல் மணிக்கு 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திரபிரதேசம் மற்றும் புதுவை மாநிலங்களுக்கு இந்த புயலை ஒட்டி ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை மதியம் மசூலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே கரையை கடக்க உள்ளதால் ஆந்திர மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை அருகில் உள்ள திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு பகுதிகளில் வேகமாக காற்று வீசி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையிலும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. சென்னை மெரினா பகுதியில் கடம் சீற்றத்துடன் காணப்படுகிறது. தமிழக கடலோரப்பகுதிகளில் கன அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.