டில்லி

ணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையால் சுமார் 15 லட்சம் பேர் ஜனவரி முதல் ஏப்ரல் வரை வேலை இழந்துள்ளதாக தெரிய வருகிறது.

பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது.   பணமதிப்புக் குறைப்பால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகமும், மத்திய நிதி அமைச்சகமும் பட்டியல் இட்டு வருகின்றன.   ஆனால் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அதற்கு நேர் மாறான தகவல்களை அளித்து வருகிறது.

அந்த மையம் அளித்த தகவலின் விபரம் பின் வருமாறு :

இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை சுமார் 15 லட்சம் பேர் தங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.    கடந்த வருடம் இதே கால கட்டத்தில் வேலைவாய்ப்பை இழந்தோரை விட இது பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.   ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில்  பணி புரிவோர் எண்ணிக்கை 40,65,00,000 லிருந்து 40,50,00,000 ஆக குறைந்துள்ளது.   இது பல நிறுவனங்களில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடின் எதிரொலியே என தெரிய வரூகிறது.

இந்த வேலை இழப்பு என்பது அனைத்து பிரிவுகளிலும், மற்றும் அனைத்து பெரிய நிறுவனங்களிலும் ஏற்பட்டுள்ளது.     அதே நேரத்தில் மருந்து உற்பத்தி மற்றும் மோட்டார் வாகனத் துறை ஆகிய இரு துறைகளிலும் ஓரளவு வேலை வாய்ப்பு அதிகமாகி உள்ளது.   தினசரி ஊதியம் பெறுபவர்களும்,  கீழ் மட்ட பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.   இந்தத் துறையில் அனைத்து மட்டத்தில் உள்ள ஊழியர்களும் பணி இழந்துள்ளனர்.   அதே போல உற்பத்தித் துறையிலும் வேலை இழப்பு அதிகம் காணப் படுகிறது.  உற்பத்தித் துறையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல மூடப்பட்டதால் வேலை இழப்பு அதிகமாகி உள்ளது.