டில்லி

நாடெங்கும் அனைத்து வாகனங்களின் விற்பனைகளும் சரிந்துள்ளதால் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் 3.5 லட்சம் பேருக்குப் பணி அற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமளவில் சரிந்துள்ளது. இந்த சரிவு 4, 3, மற்றும் 2 சக்கர வாகனங்கள் அனைத்திலும் ஏற்பட்டுள்ளன. இதனால் பல முகவர்கள் தங்களது விற்பனை நிலையங்களை மூடத் தொடங்கி உள்ளனர். அத்துடன் பல  வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தித் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் சுமார் 3.5 லட்சம் பணியாளர்களுக்குப் பணி இல்லாத  நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது இவர்களுக்கு லே ஆஃப் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பணி இழப்பு ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் தினசரி ஊதியம் பெறும் தற்காலிக தொழிலாளர்கள் ஆவார்கள். இவ்வளவு தொழிலாளர்களுக்கு லே ஆஃப் அளிப்பது இந்தியச் சரித்திரத்தில் இது முதல் முறையாகும்.

இந்த நிலை மாற வாகன விற்பனை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. அதை ஒட்டி வாகன உற்பத்தி தொழிலதிபர்கள் சங்கம் அரசுக்கு வரிக் குறைப்பு,   வாடிக்கையாளர்களுக்கும், முகவர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் வசதி உள்ளிட்டவற்றுக்காக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.