பங்கு சந்தை சரிவு : ஐந்தே நிமிடத்தில் ரூ. 4 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

டில்லி

ன்று திடீரென ஏற்பட்ட பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு வெறும் 5 நிமிடங்களில் ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மதிப்புக் குறைவு ஆகியவற்றால் பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. இறக்குமதி செய்வதைக் குறைக்க இறக்குமதி வரியை அரசு அதிகரித்துள்ளது. ஆகவே பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த தாக்கம் வர்த்தக உலகில் கடுமையாக உள்ளது.

இன்று இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் 307 புள்ளிககள் சரிவும், மும்பை பங்குச்சந்தையில் 1029 புள்ளிகள் சரிவும் ஏற்பட்டுள்ளதால் பல பங்குகளின் விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் பல முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 நிமிடங்களில் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு உண்டானது.

இதற்கு முக்கிய காரணம் அதிகமாக வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் விலைக் குறைவு என பங்கு வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாளின் இறுதியில் தேசிய பங்குச் சந்தையில் சிறிதளவு புள்ளிகள் உயர்ந்துள்ளன. ஆனால் மும்பை பங்குச் சந்தையில் எவ்வித ஏற்றமும் ஏற்படவில்லை.

பங்கு வர்த்தக தரகர் ஒருவர், “வழக்கமாக பங்கு வர்த்தகத்தில் புள்ளிகள் குறைந்த அடுத்த நாளில் சற்றே உயர்வது வழக்கமாகும் ஆனால் நேற்று முதலே பங்குச் சந்தையில் சரிவு தொடர்ந்து வருகிறது. இது குறுகிய கால சரிவு என்பதால் நீண்ட நாள் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு இருக்காது” என தெரிவித்துள்ளார்.