மும்பை

வராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக வாகன விற்பனை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.   ஒவ்வொரு மாதமும் விற்பனை குறைந்ததால் பல முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடினார்கள்.   வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேங்கியதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.  இதனால் பலர் பணி இழந்தனர்.

இதையொட்டி வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பண்டிகை நாட்களான நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி  தினங்களை பெருமளவில் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி உள்ளது. கடந்த ஒரு மாத காலகட்டத்தில் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.  சென்ற வருடம் இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையை விட தற்போது 7-10% வரை உயர்ந்துள்ளது.

நவராத்திரி முதல் தசரா வரையிலான கால கட்டத்தில் மட்டும் 60000 மாருதி கார்கள் மற்றும் 25000 ஹுண்டாய் கார்கள் விற்பனை ஆகி உள்ளன.  தீபாவளியை முன்னிட்டு 45000 மாருதி கார்கள் மற்றும் 14000 ஹுண்டாய் கார்கள் விற்பனையாகி உள்ளன.   இதைப்போல் இரு சக்கர வாகன விற்பனையும் இந்த கால கட்டத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.

குறிப்பாகக் கிழக்கு இந்தியாவிலும் வட இந்தியாவிலும் 50-55% இரு சக்கர வாகனங்கள் விற்பனை சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளன.   ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷனின் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் விற்பனை ஆகி உள்ளன. இதைத் தவிர நான்கு சக்கர வாகனங்கலில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனையும் அதிகரித்துள்ளன.  புதிய வாகனங்களான கியா மற்றும் எம்ஜி நிறுவன கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளன.