டில்லி

ற்போது அரசில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால் பள்ளிக்கல்விக்கான இந்த ஆண்டு ஒதுக்கீட்டு நிதியில் ரூ.3000 கோடி குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது அரசு கடும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கி உள்ளது.   கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியில் இருந்த உபரி நிதி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது.  மேலும் நிதிநிலை அறிக்கையின்படி அரசுத் துறைகளுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பெரும்பகுதி இன்னும் அளிக்க வேண்டி உள்ளது.

குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.56,536.63 கோடி இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.  எனவே தற்போதுள்ள நிலையில் இந்த ஒதுக்கீட்டிலிருந்து ரூ.3000 கோடி நிதியைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்த பள்ளிக் கல்வித்துறையின்  பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர், “மேற்படிப்புத் துறை தங்களுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை அவர்களே ஏற்பாடு செய்ய முடியும்.  ஆனால் பள்ளிக் கல்வித் துறைக்கு அந்த வசதி கிடையாது.   அதிலும் நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இதனால் ஊதியம் கிடைக்காத நிலை உண்டாகும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளி வராததால் செய்தியாளர்கள் மத்திய மனித வளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இடம் இது குறித்து கேள்வி  எழுப்பிய போது அவர் நிதி அமைச்சகம் விரைவில் முழுத் தொகையும் அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.   அத்துடன் இது போல் எந்த ஒரு முடிவும் தமது அமைச்சகம் எடுக்கவில்லை எனவும் கூறி உள்ளார்.