மும்பையில் கன மழை….வழுக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம்

மும்பை:

மும்பையில் பெய்து வரும் கன மழையால் அந்நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இறங்கிய ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. தரையின் ஈரப்பதம் காரணமாக விமானம் இவ்வாறு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து மும்பைக்கு வந்த அந்த விமானம் பிரதான ஓடுபாதை மூடப்பட்டதால் மாற்று ஓடுபாதையில் தரை இறங்க அனுமதிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் எவ்வித காயமும் இன்றி தப்பினர்.

இது குறித்து ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘‘விமானம் சரியான இடத்தில் தரையிறங்கிய போது, கனமழை காரணமாக ஓடுபாதை வழுக்கும் நிலையில் இருந்தது. அதிகபட்ச பிரேக் சிஸ்டத்தை பயன்படுத்தியதால் விமானம் குறிப்பிட்ட ஸ்டாப்வேயில் மட்டுமே நிறுத்த முடிந்தது” என்றார்.