சென்னை

மிழகம் முழுவதும் பெய்து வரும் கடும் மழையால் மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்திலிருந்து தமிழகம் எங்கும் கனமழை பெய்து வருகிறது.   சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று மூன்றாம் நாளாக கனமழை பெய்து வருகிறது.  வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வருவதால் இன்னும் இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தென் மாவட்டங்களில்: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. நேற்று காலை 7 மணிக்கு பாபநாசம் அணையில் இருந்து 14 ஆயிரத்து 204 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் முண்டந்துறை ஆற்றைக் கடந்து செல்லும் இரும்புப் பாலத்தை மூழ்கடித்துக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளத்தால் பாபநாசம் கோயில் முன்பு உள்ள படித்துறை, பிள்ளையார் கோயிலை மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் சென்றது. பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடப்பட்டுள்ளது. களக்காடு பகுதியில் விடிய, விடியப் பெய்த மழையால் நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு, உப்பாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. களக்காடு – தலையணை செல்லும் சாலையில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்குப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சிவபுரம், வனத்துறை அலுவலகங்கள், ஊழியர்கள் குடியிருப்பு, தலையணை பகுதிகள் துண்டிக்கப்பட்டன.

இதைப்போல் தென்காசி மாவட்டம், கடனா நதி அணையும் நிரம்பி வழிவதால் அந்த அணையில் இருந்து திறக்கப்படும் 620 கன அடி நீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இது தவிரக் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வரும் வெள்ள நீரும் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோயில், தைப்பூச மண்டபம் ஆகியவை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

இந்த வெள்ளம் காரணமாகத் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் கைலாசபுரம், சிந்துபூந்துறை, அண்ணாநகர் ஆகிய பகுதி மக்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. .அதிக நீர்வரத்து காரணமாக, குற்றால அருவியில் 2வது நாளாகக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி முடங்கியது. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீலாயதாட்சியம்மன் கோயில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யமுடியாமல் சிரமம் அடைந்தனர்.    இதைப் போல் வேளாங்கண்ணி பேராலயம் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது.   நேற்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. அத்துடன் கடல் சீற்றம் காரணமாக டெல்டா மாவட்டத்தில் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

திருவிடைமருதூர் அருகே அணக்குடி கிராமத்தில் பழவாற்றில் கிராம மக்கள் சென்று வரும் வகையில், தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. மழையினால், தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கடலோர பகுதிகளில் உள்ள 34 மீனவ கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சேதுபாவாசத்திரம் பகுதியில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

நேற்று முன் தினம் அதிகாலை ராமநாதபுரத்தில் தொடங்கிய மழை நேற்று முழுவதும் பெய்தது.  இந்த மழையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரத வீதிகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.   ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர் மழை காரணமாகச் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி சத்யா நகர், மானகிரி பகுதியில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன., இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.