சென்னை

ஓட்டல்களில் ஜி எஸ் டி வரிவிதிப்பை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35% வரை குறைந்து வருகிறது.

புதிய ஜி எஸ் டி கொள்கையின்படி வருடத்துக்கு ரூ 50 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு 5% வரியும்,.  குளிரூட்டப்படாத ஓட்டல்களுக்கு 12% வரியும், குளிரூட்டப்பட்ட ஓட்டல்களுக்கு 18% வரியும் விதிக்கப்படுகின்றன.    இந்த வரி விதிப்பு அமுலுக்கு வரும் முன்பே தங்கள் எதிர்ப்பை காட்ட ஓட்டல்கள் வேலை நிறுத்தம் செய்தன.   ஆனாலும் மத்திய அரசு ஜி எஸ் டி யை அமுல்படுத்தியது.

தற்போதைய ஓட்டல்கள் நிலை குறித்து ஓட்டல் அதிபர்கள் சங்க தலைவர் ரவி  கருத்து தெரிவிக்கையில், “முன்பு 2% வாட் வரி விதிப்பு மட்டுமே இருந்த நிலையில் தற்போது 18% வரி விதிக்கப்படுகிறது.   இந்த வரி விதிப்பானது குளிரூட்டப் படாத பகுதியில் உணவு உண்போருக்கும் பொருந்தும்.    குளிரூட்டப்படாத பகுதியில் உண்பவர்கள் எதற்க்காக இந்த வரியை செலுத்த வேண்டும் ?   இதனால் சிறு உணவு விடுதிக்கு செல்பவர்களும் இந்த வரிக்கு பயந்து சாலை ஓரக் கடைகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.   இதனால் வழக்கமான வாடிக்கையாளர்களில் 35%க்கும் மேல் குறைந்து விட்டனர்.

இது குறித்து நாங்கள் பலமுறை மத்திய அரசுக்கு முறை இட்டுள்ளோம்.    அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினோம்.   இதுவரை அவர்களிடமிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.     வரி விதிப்பு என்பது இந்தியா முழுவதும் ஒரே விகிதத்தில் உள்ளது.  டில்லியில் உள்ள குளிரூட்டப்பட்ட ஓட்டலிலும் 18% வரியும்,  சிறு நகரமான கன்னியாகுமரியிலும் 18% வரியும் விதிப்பது எப்படி நியாயம் ஆகும்?

சிறு நகரத்தில் வசிப்பவர்கள் ஒரு பிளேட் இட்லிக்கு 18% வரி அளித்து சாப்பிடும் அளவுக்கு வசதியானவர்கள் இல்லை.   எனவே நாங்கள் இந்திய உணவு வகைகள் வழங்கும் ஓட்டல்களுக்கு 5% என மாறுதலாவது செய்யலாம்.   சர்வ தேச உணவு வகைகள் வழங்கும் ஓட்டலுக்கு 18% இருக்கலாம்.   ஒரு நாளைக்கு மூன்று முறை இந்திய உணவு உண்பவர்கள் நம் மக்கள்.   அவர்களுக்கு இவ்வளவு வரி செலுத்த முடியுமா?”  என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.