டில்லி

கொரோனா அதிக அளவில் பரவுவதால் டில்லியில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது.

 

கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது.   அதையொட்டி ஊரடங்கு அமல் ஆனது. அதன் பிறகு வேகமாக பரவி இடையில் சற்றே பரவல் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.   இதையொட்டி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.   இந்நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்தது.

கடந்த சில நாட்களாக கொரோனா அதிக அளவில் பரவுவதால் இரண்டாம் அலை தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  குறிப்பாக இந்த பாதிப்பு, மகாராஷ்டிரா,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.   நேற்று முன் தினம் இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.  இன்று முதல் டில்லி நகரிலும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.   அதன்படி டில்லியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய சேவைகள் தவிர மீதமுள்ளவை அனைத்துக்கும் தடை விதிக்கப்பட உள்ளது.

நேற்று டில்லி அரசு 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  இந்நிலையில் இன்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.