டில்லி

ந்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்ததால் சீன நிறுவனத்துக்கு  600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 29 ஆம் தேதி அன்று இந்திய அரசு 59 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது.  இதில் டிக்டாக் முக்கியமானதாகும்.   இந்தியாவில் இந்த செயலியை 32.3 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.   இந்த செயலியின் மொத்த தரவேற்றத்தில் 44% இந்தியாவில் இருந்து நடைபெற்று வந்துள்ளது.

இந்த செயலியின் தாய் நிறுவனம் சீனாவின் பைட்டான்ஸ் என்னும் நிறுவனமாகும்.   இந்த நிறுவனத்தின் செயலிகளான டிக்டாக், ஹெலோ, விகொவீடியொ உள்ளிட்ட செயலிகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன செயலிகளின் பட்டியலில் உள்ளன.  இந்த செயலிகள் சீன ராணுவம் இந்திய எல்லையில் நடத்திய மோதலுக்குப் பிறகு தடை செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் ஆங்கில நாளேடான குளோபல் டைம்ஸ் இந்த சீன நிறுவனம் இந்தியச் சந்தையில் கடந்த 5 வருடங்களில் 100 கோடி டாலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  மேலும் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால் மட்டும் இந்த நிறுவனத்துக்கு சுமார் 600 கோடி டாலர் இழப்பு ஏற்படும் எனவும் அனைத்து செயலிகளும் சேர்ந்தால் மேலும் அதிக இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.