சென்னை

ன்று கொரோனா பரவுதலைத் தடுக்க நாடெங்கும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன.

உலகின் அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் சுமார் 290 பேருக்கு மேல் பாதிப்பு அடைந்துள்ளனர்.    இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.  தமிழகத்தில் மட்டும் 6 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.  தற்போது 100க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பபடுள்ளன.

பிரதமர் மோடி இந்த கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க  இன்று மக்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அவசரத் தேவைகளைத் தவிர வேறு எதற்கும் யாரும் வெளியில் வர வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.   நாடு முழுவதும் மக்கள் ஊரடங்குக்கு ஆதரவாக சுமார் 7 கோடிக்கும் மேற்பட்டோர் கடைகளை அடைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.  இதனால் 40 கோடி ஊழியர்கள் வீட்டிலேயே இருப்பார்கள்..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலத்தில் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களை இணைக்கும் சாலைகளை வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளார்.   இந்த சமயத்தில் பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், ஆம்புலன்ஸ், எரிவாயு வண்டிகள் போன்றவையும் மரணம் போன்ற தவிர்க்க இயலாத காரணங்களுக்காகப் பயணிகள் செல்லும் வாகனங்களும் அனுமதிக்கப்படும் என அவர் கூறி உள்ளார்.

நேற்று இரவு முதல் தமிழக எல்லைப்பகுதிகளான ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.   டில்லியில் இருந்து வரும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் தமிழகத்துக்கு வருகின்றன.   தற்போது அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இதைப்போல் தமிழக கர்நாடக எல்லை மற்றும் கேரள எல்லையில் உள்ள  அனைத்து சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டுள்ளன.  கேரளாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.  பால், பத்திரிகை, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.,

தமிழகத்தில் நேற்று காலை முதலே குறைந்த வாகனங்கள் இயக்கப்பட்டன.  பல கடைகள் நேற்று மாலையில் இருந்தே மூடப்பட்டுள்ளன.  தமிழக அரசு இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளதால் குடிமகன்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.  இன்று காலை முதலே தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட அனைத்து நகரங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.  இந்த ’மக்கள் ஊரடங்கு’க்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.