காஷ்மீரில் கட்டுப்பாடு : களை இழந்த ஐரோப்பா கிறிஸ்துமஸ்

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது..

கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   அத்துடன் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு லடாக் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.   இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

காஷ்மீர் மாநிலம் ஆப்பிளுக்கும் சுற்றுலாவுக்கும் மட்டுமின்றி கைவினைப் பொருட்களுக்கும் பிரபலமானதாகும்.   குறிப்பாக இங்கு காகிதம் மற்றும் காகிதக் கூழ் மூலம் உருவாக்கப்படும் சிறு மணிகள், மற்றும் கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டப்படும் சங்கிலிகள், தோரணங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவ பொம்மைகள் போன்றவற்றுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குக் காஷ்மீர் கைவினைப் பொருட்கள் ஏராளமாக ஏற்றுமதி நடைபெறும்.  நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இந்த ஏற்றுமதி வர்த்தகத்தை நம்பி உள்ளன.   மாநிலம் முழுவதும் போக்குவரத்து, தொடர்பு ஆகியவை நிறுத்தப்பட்டதால் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் வணிகர்கள் பொருட்கள் செய்வோரைத் தொடர்பு கொள்ளாத நிலை ஏற்பட்டு வர்த்தகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் வர்த்தக குழுவின் தலைவர் ஷேக் ஆஷிக், “தொலைத் தொடர்பு மற்றும் போக்குவரத்து தடையினால் கைவினைப் பொருட்கள் வர்த்தகம் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.  கடந்த ஆகஸ்ட் 4 முதல் டிசம்பர் 3 வரையிலான 4 மாதங்களில் இந்த பொருட்களின் வர்த்தகத்தில் ரூ.2466 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கைவினைப் கலைஞர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.    அவர்கள் வர்த்தகம் எப்போது மீண்டு வரும் என்பது தெரியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.   அது மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்த கைவினைப் பொருட்கள் கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் அதிக அளவில் பயன்படுத்தப் படுவதால் இந்த வருட கிறிஸ்துமஸ் அங்கு களை இழந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.