கிருஷ்ணா நதி நீர் தொடர்ந்து வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு

சென்னை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களில் முக்கியமானது பூண்டி ஏரி ஆகும். இந்த ஏரி பருவ மழை இல்லாததால் வரண்டு போனது. அதே நேரத்தில் பூண்டிக்கு வர வேண்டிய கிருஷ்ணா நதி நீர் 8 டி எம் சி வராமல் இருந்தது. இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தனர்.
அதை ஒட்டி கடந்த மாதம் 22 ஆம் தேதி கண்டலேறு அணையில் திறக்கப்ப்பட்ட நீர் தமிழக எல்லைக்கு 28 ஆம் தேதி வந்தது.

அதற்கு அடுத்த நாளான 29 ஆம் தேதி பூண்டி ஏரியை இந்த கிருஷ்ணா நதி நீர் வந்தடைந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 22 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த நீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 21 கன அடியாக வந்து சேருகிறது. தற்பொது பூண்டி ஏரியில் 3231 கன அடியில் நீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 320 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ண நதி நீர் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படி அதிகரிக்கும் வேளையில் புழல் ஏரிக்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.