நடிகையின் உயிரைக் குடித்த ஊரடங்கு..

நடிகையின் உயிரைக் குடித்த ஊரடங்கு..

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகத் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த தொடர்களில் நடிப்போர் வேலை இல்லாததால், பெரும் சிரமத்துக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மன்மீத் கிரேவேல் என்ற டி.வி.நடிகர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 அதே வழியில் டி.வி. நடிகை ஒருவரும் உயிரை மாய்த்துள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் பிரேக்ஷா மேத்தா.

‘கிரைம் பெட்ரோல்’’ என்ற டி.வி. தொடர் மூலம் பிரபலமானவர்.

‘’ மேரி துர்கா’’ ‘’ லால் இஷாக்’’ போன்ற டி.வி. நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் நின்று போனதால், வீட்டில் வேலை இல்லாமல் இருந்து வந்தார்.

இந்த விரக்தியில் பிரேக்ஷா, இந்தூரில் உள்ள தனது வீட்டில், மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களாகவே பிரேக்ஷா , சமூக வலைத்தளங்களில், தனது ஆற்றாமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

‘’ உங்கள் கனவுகள் மடிந்து போவது, மிகவும் மோசமான அம்சம் ‘’ என்று அண்மையில், அவர் விரக்தியுடன் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

– பா. பாரதி