கோல்ஃப் உலகத்தையும் குதறி எடுக்கும் கொரோனா.. 

கோல்ஃப் உலகத்தையும் குதறி எடுக்கும் கொரோனா..

கேடீஸ்….  கோல்ஃப் விளையாபவர்களுடன் தோளில் ஒரு பெரிய பையில் கோல்ஃப் விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்களைச் சுமந்தபடி ஒருவர் கூடவே செல்வதைக் கவனித்திருப்பீர்கள்.  இவர்களின் பெயர் தான் “கேடீஸ்”.

இந்த கொரோனா இவர்களையும் விட்டு வைக்கவில்லை.  மாதம் 12,000/- முதல் 15,000/- வரையான சம்பளத்தில் காலம் தள்ளி வரும் இவர்களின் பிழைப்பிலும் கடந்த மார்ச் மாதம் முதல் மண்ணை போட்டுவிட்டது கொரோனா ஊரடங்கு.

தமிழ்நாடு கோல்ஃப் பெடரேஷனின் செயலாளர், ” நாங்க மளிகை பொருட்களும், உதவித்தொகையாக மாதம் ரூ. 5,000/-ம் குடுத்திட்டு வரோம்.  ஆனால் இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை ” என்கிறார்.  விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் தற்போது பெடரேஷன் மூலமாக அரசுக்கு கோல்ஃப் பயிற்சி மற்றும் விளையாட்டைத் தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர்.

“கோல்ஃப் மற்ற விளையாட்டுக்களைப் போன்றது இல்லை என்பதால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இதனைத் தொடங்க அனுமதி கேட்டு அரசை அணுகியுள்ளோம்.  அதன் ஒரு பகுதியாக கேடீஸ்களை உபயோகிப்பதைத் தவிர்க்க இருப்பதாகவும் கூறியிருக்கிறோம்” என்று கூறுகிறார்.

இதில் தான் கேடீஸ்களுக்கு பிரச்சினையே.  “எங்களின் வாழ்வாதாரமே இந்த வேலை ஒன்று தான்.  தடை நீங்கி வேலைக்குச் செல்ல நினைக்கும் போது இது போன்ற ஏற்பாடு எங்களுக்கு மீண்டும் சிக்கலை உண்டாக்குகிறது.  முடிந்தவரை பெடரேஷன் உறுப்பினர்களைச் சந்தித்து உதவி கேட்க இருக்கிறோம்.  முடிவு என்ன ஆகுமென்றே தெரியவில்லை” என்று வருந்துகிறார் கேடிஸ்களில் ஒருவர்.

கோல்ஃப் விளையாடுபவர்களும், “அவங்க இல்லாம எங்களால விளையாடவோ, பயிற்சி தரவோ முடியவே முடியாது.  சின்ன வயசு பசங்க இந்த கோல்ஃப் பேக்கை தூக்கிட்டு போயிடலாம்.  எங்களை போல வயசானவங்களால நிச்சயமாக முடியாது். அதோட நல்ல அனுபவம் மிக்க கேடீஸ்களால் தான் காற்றின் வேகம், பந்தை எந்த இடத்தில் பிளேஸ் பண்றது, புல்வெளியின் தன்மை மற்றும் பந்து போய் விழுகிற இடம் இது மாதிரி விசயங்களில் உதவ முடியும்.  அதும் ரொம்ப முக்கியம்” என்று கேடீஸ்களின் முக்கியத்துவம் குறித்து விளக்குகின்றனர்.

ஊரடங்கின் தாக்கம் அளவிட முடியாததாக இருப்பதுடன், நான் இதுவரை கேட்டறிந்திடாத ஏரியாக்களிலெல்லாம் கூட பாதிப்பைத் தந்து வந்திருக்கிறது என்பது தான் உண்மை.

– லட்சுமி பிரியா

You may have missed