இந்தியாவில் ஊரடங்கு : ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு தட்டுப்பாடு

டில்லி

ந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கும் ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுவதை  கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   அதன் பிறகு  மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.   ஆயினும் நிலைமை கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  கடந்த மார்ச் 25 முதல் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எருமைக்கறிக்கு உலகெங்கும் நல்ல கிராக்கி உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் ரமலான் மாதத்தின் போது ஏராளமான மக்கள் வாங்கி உண்பது வழக்கமாகும்.   ஒவ்வொரு மாதமும் இந்தியாவிலிருந்து 1 லட்சம் டன்கள் எருமைக்கறி ஏற்றுமதி ஆவது வழக்கம்.  தற்போது அது அடியோடு நின்று போய் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் எருமைக்கறி ஏற்றுமதி அடியோடு குறைந்துள்ள நிலையில் இந்த மாதமும் வழக்கத்தை விட மிக குறைந்த அளவில் ஏற்றுமதி நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.  மலேசியா போன்ற நாடுகளில் 70%க்கும் அதிகமாக மாட்டுக்கறி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இது தற்போது அடியோடு நின்று போய் உள்ளது. இதனால் இந்தியாவுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் தற்போது ரமலான் மாதம் என்பதால் உலகெங்கும் உள்ள பல இஸ்லாமிய மக்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எருமைக்கறி தட்டுப்பாடு காரணமாக மிகவும் துயர் அடைந்துள்ளனர்.