நோ ரீடெயில்.. ஒன்லி ஹோல் சேல்..  மதுக்கொள்ளையரின் புதுவித வியூகம்..

ஊரடங்கு காரணமாகக் கிட்டத்தட்ட 40 நாட்களாக மதுக்கடைகள் பூட்டிக்கிடக்கின்றன.

தொடக்கத்தில் மதுக்கடைகளை உடைத்து பாட்டில் ,பாட்டிலாக, அள்ளிச்சென்றனர், குடிமக்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள குடிமகன்களோ, ‘இப்படி சில்லறையாகத் திருடுவதை விட மதுபானம் உற்பத்தி செய்யும் ஆலையிலேயே கொள்ளை அடிக்கலாமே?’’ என்று யோசித்தனர்.

சித்தூரில் பெருமாள் பெயரைக் கொண்ட பிரபல மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

தேவை ஏற்படும் சமயங்களில் அந்த ஆலைக்குள் புகுந்து பெட்டி. பெட்டியாக மது பாட்டில்களை அள்ளி வந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக சுமார் 110 பெட்டி மது பாட்டில்களை அந்த ஆசாமிகள் கொள்ளை அடித்துள்ளனர். பாட்டில் கணக்கு ஆயிரங்களைத் தாண்டும்.

அண்மையில் தான் , ஆலை ஊழியர்கள் இந்த திருட்டைக் கண்டு பிடித்தனர்.

போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் நேற்று அந்த மதுபான ஆலையில் கொள்ளையரை எதிர் நோக்கி வலைவிரித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 5 பேர் கும்பல் அந்த ஆலைக்குள் வழக்கம்போல கவலையோ பயமோ இல்லாமல் நுழைய முயன்றது. அப்போது, அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் கடந்த ஒரு மாதமாக ஆலைக்குள் புகுந்து மது பாட்டிகளைக் கொள்ளை அடித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அவர்களின் கூட்டாளிகளான மேலும் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்