லாக் டவுன் வதந்தி..  பட்டையைக் கிளப்பும் வியாபாரம்…

சென்னையில் மீண்டும் ஓர் லாக்டவுன் அறிவிப்பு வர இருப்பதாக ஒரு செய்தி கடந்த இரண்டு நாட்களாக வெகு வேகமாகப் பரவி வருகிறது. இதன் விளைவாகப் பொதுமக்கள் அவசர அவசரமாக பதினைந்து நாட்களுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த திடீர் பரபரப்பினால் சென்னையில் பெரும்பாலான மளிகைக்கடை மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் நேற்றிலிருந்து கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  “ஏதும் தெர்ல சார்.  திடீர்னு இப்டி ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன்.  அதான் வீட்டுக்கு தேவையானதை வாங்கி வெச்சிடலாம்னு வந்தேன்” என்கிறார் ஒரு வாடிக்கையாளர்.

தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகும் கூட அதிக வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்த கடைகளில் இப்போது அதிக கூட்டம் காணப்படுகிறது.  “தினமும் 50 – 60 பில்லிங் ஆகும் சார்.  ஆனா நேத்திலிருந்து அது அப்டியே டபுள் ஆகியிருக்கு” என்கிறார் சைதாப்பேட்டையிலுள்ள ஒரு சூப்பர் மார்கெட் ஓனர்.

கேகே நகரில் உள்ள ஓர் ஸ்னாக்ஸ் கடைக்காரர், “திடீர்னு ரெண்டு மூனு நாளா செம கூட்டம் சார்.  எல்லாம் இந்த லாக்டவுன் வதந்தியால தான்” என்கிறார்.

இந்த திடீர் கூட்டம் சிறு கடைகள் தொடங்கி, காய்கறிக்கடை, பேக்கரிகள், சூப்பர் மார்கெட்கள் என்று எங்கும் வியாபித்துள்ளது, நேற்றிலிருந்து.

– லெட்சுமி பிரியா