கிராமப்புறங்களில் அரை வயிறுதான்.. லாக் டவுன்  பரிதாபங்கள்..            

கிராமப்புறங்களில் அரை வயிறுதான்.. லாக் டவுன்  பரிதாபங்கள்..

எல்லாவற்றையும் பொதுவாகவே அணுகிப் பழகி விட்டோம்.  அதனாலேயே தற்போதைய கொரோனா ஊரடங்கு கிராமப்புற  மக்களின் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பது பற்றி பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.

PRADAN, Action for Social Advancement, BAIF, Transform Rural India Foundation, Grameen Sahara, SAATHI-UP and The Aga Khan Support Programme (India), Vikas Anvesh Foundation and Sambodhi ஆகிய  தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து, 12 மாநிலங்களின், 47 மாவட்டங்களில், 5162 குடும்பங்களிடையே நடத்திய சர்வேயில் கண்டறியப்பட்ட உண்மைகள் பெரிதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கின்றன.

68% குடும்பங்கள் தாங்கள் தினசரி உண்ணும் உணவின் அளவினையும்,  50% குடும்பங்கள் தாங்கள் உணவு உண்ணும் வேளைகளையும் குறைத்துக் கொண்டுள்ளன.  24% குடும்பங்களோ தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை வெளியிலிருந்து கடனாகப் பெற்று வருகின்றன.

மேலும் விவசாயம் சார்ந்த குடும்பங்களின் தானிய கையிருப்பு வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், மே மாதம் கடைசிக்குப் பிறகு கையிருப்பே இருக்காது என்கின்றனர்.  அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் அடுத்து வரப்போகும் பருவ காலத்தின் விவசாய தேவைக்கான விதைகளை நமது அரசாங்கம் தான் ஏற்பாடு செய்து தர வேண்டி வரும் என்கின்றனர்.

ஊரடங்கினால் வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், 22% குடும்பங்கள் அக்கம்பக்கத்தினரிடம் கடனாகப் பெற்றும், 16% குடும்பங்கள் வட்டிக்கு வாங்கியும், 22% வீட்டிலுள்ள பொருட்களை விற்றும், 14% நகை போன்றவற்றை அடகு வைத்துமே தங்களது பணத்தேவைகளைச் சந்தித்து வருகின்றனர் என்கிறது இந்த சர்வே.

எல்லாவற்றையும் விட அதிக அதிர்ச்சி தரும் ஒரு விசயம், 29% பெற்றோர் தங்கள் குழந்தைகளை இனி தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவது குறித்து யோசித்து வருவதாகத் தெரிவித்திருப்பது தான்.  எதிர்கால சந்ததியினை பெரிதும் பாதிக்கப்போகும் ஓர் அவலம் இது.  கல்வி மிகவும் இன்றியமையாததான ஒன்றாக மாறி வரும் சூழலில் இத்தனை பெரிய அளவிலான சதவிகிதம் மாணவர்களின் இடைநிறுத்தம் பெரிதும் கவலையளிக்கக்கூடியதாகும்.

மேலும் பணி நிமித்தம் வெளியூர், வெளிமாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தவர்களில் வெறும் 17% மட்டுமே இதுவரை சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.  மற்றவர்களின் நிலை என்ன ஆனதென்று தெரியவில்லை என்கின்றனர்.

இவற்றிற்கெல்லாம் அரசு என்ன மாதிரியான செயல்திட்டங்களை உருவாக்கிச் சமாளிக்கப் போகின்றது என்பதைப் பொறுத்தே இனி வரும் காலங்களில் இச்சமூகம் அமையப் போகின்றது.

– லட்சுமி பிரியா