டில்லி

மக்களவை தேர்தலை முன்னிட்டு தொடங்கப்பட்ட போலி கணக்குகளை முகநூல் நிர்வாகம் நீக்கி வருகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு சமூக வலை தளமான முகநூலில் பலரும் விளம்பரங்களையும்  பதிவுகளையும் வெளியிட்டு  வருகின்றனர். இவற்றில் சில ஆட்சேபகரமான விதத்தில் அமைந்து விடுகின்றன.  இதனால் முகநூல் தற்போது விளம்பர விதிமுறைகளை கடினமாக்கி உள்ளது. அத்துடன் பதிவுகளும் கண்காணிக்கப்பட்டு பல பதிவுகளும் கணக்குகளும் நீக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு கடந்த வாரம் 700 க்கும் மேற்பட்ட இந்திய பக்கங்களும் கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.

இது குறித்து முகநூலின் இந்திய நிர்வாக இயக்குனரும் துணை தலைவருமான அஜித் மோகன் தனது பிளாக் பக்கத்தில், “நாங்கள் இந்திய மக்களவை தேர்தலை ஒட்டி நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் பதிவுகளை நீக்குவதில் முனைந்துள்ளோம். இதற்கு எங்களுக்கு அரசு குழுக்கள், வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்கள் உதவி வருகின்றன.

கடந்த 18 மாதங்களாக பதிவுகளில் எந்த ஒரு தவறான விவரங்கள் மற்றும் உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு தலையீடுகள் இல்லாமல் இருக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம், இதற்கு எங்கள் நிபுணர் குழு பெரிதும் உதவி வருகிறது. இந்த குழுவில் உள்ள பொறியாளர்கள், நிபுணர்கள், மற்றும் டேட்டா விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கவனத்துடன் அனைத்து கணக்குகளையும் பரிசீலித்து வருகின்றனர்.

இந்த தேர்தலை முன்னிட்டு பல கோடிக் கணக்கில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் போலி பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகள் ஆகும். அவற்றை நாங்கள் கண்டறிந்து முடக்கி வருகிறோம். கடந்த சில நாட்களில் நாங்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் உலக அளவில் 10 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.