மகாராஷ்டிராவில் வெங்காய விலை மேலும் சரிவு : மற்றொரு விவசாயியின் போராட்டம்

ந்தர்சுல், மகாராஷ்டிரா

வெங்காயத்தின் விலை 51 பைசாவாக குறைந்ததால் விற்றதில் கிடைத்த பணத்தை அப்படியே ஒரு விவசாயி மகாராஷ்டிர முதல்வருக்கு அனுப்பி உள்ளார்.

இந்தியாவில் மொத்தம் உற்பத்தி ஆகும் வெங்காயத்தில் 50% மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.   ஏற்கனவே இந்தப் பகுதியில் வெங்காய விலை மிகவும் சரிந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயி சஞ்சய் சாதே தனது 750 கிலோ வெங்காயத்தை ரூ.1064 க்கு விற்க நேர்ந்தது.   அதனால் விரக்தி அடைந்த அவர் அந்த பணத்தை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தது தெரிந்ததே.

அதே நாசிக் மாவட்டத்தில் தற்போது வெங்காய விலை மேலும் சரிந்துள்ளது.   நாசிக் மாவட்டத்தில் உள்ள அந்தர்சுல் என்னும் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரகாந்த் தேஷ்முக்.   இவர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டதில் இவர் 545 கிலோ வெங்காயம் உற்பத்தி செய்தார்.   அந்த வெங்காயத்தை வேளாண் விளை பொருள் கமிட்டி மூலம் விற்பனை செய்தார்.

தற்போது வெங்காயம் ஏராளமாக விளைந்துள்ளதால் அவருக்கு ஒரு கிலோவுக்கு 51 பைசா மட்டுமே கிடைத்தது.    சந்திரகாந்த்துக்கு இந்த விற்பனையில் வேளாண் விளை பொருள் கமிட்டிக்கு தர வேண்டிய கமிஷன் போக ரூ. 216 கிடைத்தது.    அவர் அதை அப்படியே மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிசுக்கு அனுப்பி உள்ளார்.

இது குறித்து சந்திரகாந்த் தேஷ்முக், “நல்ல தரமான வெங்காயமாக இருந்தும் எனக்கு உழைப்புக்கேற்ற விலை கிடைக்கவில்லை.   இந்த சொற்ப தொகையின் மூலம் என்னால் கடனை அடைக்கவும் முடியாது.  குடும்பச் செலவும் செய்ய இயலாது.   அதனால் நான் இந்த பணத்தை அப்படியே முதல்வருக்கு அனுப்பி விட்டேன்” என தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் துயருறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.